என் இறைவா, என் இறைவா,
ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைக் காப்பாற்றாமலும்,
நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்
ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்;
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே!
அவர் இவனை மீட்கட்டும்;
தாம் அன்பு கூர்ந்த இவனை
அவர் விடுவிக்கட்டும்”;
என்கின்றனர்.
பாவம் பரமன், இன்னும் சிலுவையில்
பாவிகளை மன்னிக்கச் சொல்லி
தொடர்ந்து மனுச்செய்கிறார்.
மதமோ பாவிகளை உற்பத்தி
செய்துகொண்டிருக்கிறது.
மனிதமும், மன்னிப்பும்
ஆலயத்துள் பெறப்பட்டு
ஆலயத்துக்குள் விவாதிக்கப்பட்டு
ஆலயத்துக்குளே விட்டுச் செல்லப் படுகிறது.
காய்கள் கனியாகும் எனும் நம்பிக்கையில்
சிலுவை மட்டும் இன்னும் காயவில்லை.
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்,
இன்னும் சிலுவை கதறிக் கொண்டிருக்கிறது
காதுகளைக் கழற்றிவிட்ட மனிதர்களைப் பார்த்து.