காய்காய் என்றான் காவியக் கவிஞன்
காய்ந்தேன் கவிதனைப் பார்த்து-அவன்
தாய்காய் காய்ந்த தத்துவ வரிகள்
தமிழால் ஆனது கோர்த்து!
சாய்க்காய் என்றான் சமத்துவம் மண்ணில்
சாய்வார் நிலைதனை ஒர்த்து-நீர்
மாய்க்காய் என்றான் மணந்தரும் தமிழை
மாற்று மொழிகளைப் பார்த்து!
படிக்காய் என்றான் பழக்க வழக்கம்
பாவலன் தன்னைப் பார்த்து–என்னை
அடிக்காய் காப்பி அடித்தால் கேடு
அடடாப் போவாய் நீர்த்து!
கொடுக்காய் கொடுத்தால் கொஞ்ச மிடமெனும்
மிடுக்காய் அமரும் இந்தி–பின்
அடுக் கடுகாய் அணி வகுப்பார்
அதனால் கேடு பிந்தி!
கழிக்காய் அன்பை காட்டாய் வெறுப்பை
இழுக்காய் நடத்தல் பாவம்
அழிக்காய் உறவை ஆக்கு நட்பை
அதுதான் வாழ்வின் யோகம்!
மக்காய் இருந்தால் மதிக்காய் போவார்
மதிதனைத் திருத்து நாளும்–நீ
உனக்காய் வாழ்ந்தால் உலகம் பழிக்கும்
உரிமைக்கு கொடுப்பாய் குரலும்!
No Comment! Be the first one.