வங்கத் திரளலை வந்து கதைக்குது
வன்மப் பெரும் புயலை
அங்கு நிகழ்த்திய ஆணவப் போக்கினால்
ஆன உயிர்பலியை
எங்களி னத்தவர் எட்டுத் திசையிலும்
ஏக்கப் பெரும்பிடியில்
மங்கு மவரது மானிட வாழ்வது
மற்றதோர் நாடடியில்!
உடலை விடுத்தொரு உயிரலை வென்பதாய்
ஊமை போல் வாழுகிறோம்
கடலை யடுத்தெங்கள் கண்ணீர் கதைகளை
கன்னத்தில் எழுது கிறோம்!
வேட்கை தவிப்பினில் வேதனை கொண்டுமே
வேள்வித் தீ மூட்டுகிறோம்
ஆட்பட ஈழமும் ஆங்கினி வாழவும்
ஆசையைக் கூட்டுகிறோம்!
வென்று முடித்தந்த வெற்றியை ஈட்டும்நாள்
விரைவில் வர இருக்கு
நன்று விளைந்திடும் நாளது அன்றுதான்
நம்மின் உயிர் சிரிப்பு!
No Comment! Be the first one.