பொய்யும் மெய்யும் புதுமைக் கலப்பும்
மையில் தோய்ந்தால் கவிதை
செய்யும் கவிதையில் செந்தமிழ் மின்ன
செப்பனிடு அவ் வினிதை!
புலவர் கவிஞர் பொழுதை கடத்தும்
களமே கற்பனை யோட்டம்
அளவே இல்லா அளவில் தோன்றும்
அதிசயத்தில் மன நாட்டம்!
உச்சி யிலேற்றும் உடன்கீழ் தள்ளும்
அச்சம் தவிர்க்கும் சிறிது
மெச்சிட போற்றும் மிகுந்து தூற்றும்
மிளிரும் விளங்கா அரிது!
கவிதைப் போலொரு கையறம் செய்வது
காண கிடைக்கா ஒன்று
புவியில் கவிதை பூக்கா நாளது
புவியு மிருக்கா தன்று!