ஆண்மைக்குப் பிணி….

சில்லென காற்று சிலிர்த்திட மேனி
உள்ளொரு கதவு திறக்கிறது-அங்கு
எல்லாம் இருளில்
இருந்திட்ட போதும்
மெல்லொரு வெளிச்சம் மிளிர்கிறது!

நினைவில் தளும்பும் நித்திய உணர்வு
நெஞ்சை இழுத்துப் பிடிக்கிறது–ஒரு
கனவில் குலுங்கும் காட்சியின் விரிவு
கண்களை அழுத்தி வதைக்கிறது!

அவளால் அகத்தில் ஆசைப் பேரலை
அலைந்து அலைந்து உடைகிறது–அதை
எவரால் நிறுத்த
இயலும் அறியேன்
இம்சை மனதை குடைகிறது!

அவளால் மட்டும் அணையிட முடியும்
அகத்தெளி வதனும் சொல்கிறது– அதை
அவளே விழியின் அசைவால் சொல்ல
அன்பின் நெருக்கம் வளர்கிறது!

மானுட உறவின் மகத்துவ விளைச்சல்
மங்கைய ரிடத்து அட்சயமே–அதைக்
காணார் வாழ்வில் காணா ரன்றோ
கதையும் முடியா நிச்சயமே!

வீணது பிறப்பென விளக்குவர் பெண்மையின்
மேனிப் பயிலா கண்கள்–அவர்
ஆணென ஆனது ஆண்மைக்கு பிணியாய்
ஆகிடும் பெரும்வலிப் புண்கள்!