நிம்மதி இல்லையே நிமலனே என்பதும்
நிலையாமை யறியாது நித்திய புலம்பலும்
தம்மதி பக்குவ தரக்குறை புரியாது
தானெதிர் நோக்குதல் தவறது அறிவரோ!
கூட்டிய பொருளது குலைவது வியப்பிலை
கொண்டு நாம்வந்தது கூடவும் ஒன்றிலை
ஈட்டிடும் மெய்பொருள் எதுவென புரிதலில்
காட்டவோ ஆர்வமும் காட்டுத லில்லையே!
பொய்யுடல் மெய்யென போற்றுதல் காண்கிறோம்
புகழது நிலைக்குமாய் பொழுதுமே வாழ்கிறோம்
கைபொருள் ஆள்வதில் கருணையை மறக்கிறோம்
செய்கையில் சேர்ப்பது சிறப்பென எண்ணினோம்!
அமைதியை குலைத்திடும் ஆசையைத் துறக்கணும்
அமைந்தநல் வாழ்வினை அரியதாய் நினைக்கணும்
இமைநொடி காலமும் இறையவனின் கொடையது
இருந்திடும் நாளதே இருப்பது நிச்சயம்!
No Comment! Be the first one.