ஊக்கம் இல்லா உழைப்பு – மனதில்
தூக்கிச் சுமக்கும் துயர்..
கரும்பாய் இருந்தால் கசக்குவார் – கடிக்கும்
எறும்பாய் இருப்பாய் இனி.
பணிந்ததும் பயந்து தணிந்ததும் போதும்
துணிந்தால் வாராது துயர்.
தகுதி மறந்து தன்மானம் இழந்து
சொகுசாய் வாழ்வதா சுகம்?
திரும்பத் தருமோ தீர்ந்த இளமையை
விரும்பிச் செய்யா வேலை?
கொஞ்சமே கிடைத்தாலும் கூனிக் குறுகாமல்
நெஞ்சம் நிமிர்த்தி நில்.
வாடிக் கிடந்தால் வாய்ப்புகள் வாரா.
தேடி அலைந்து திரி
பெற்ற அவமானம், பேச்சுக்கள் எல்லாம்
வெற்றியால் அடித்து விலக்கு .
விதிப்பயன் என்று வீணாய் உழைக்காதே
மதிப்பில்லா இடத்தில் மாடாய் .
கலகம் செய்யாமல் கழன்றுகொள் எளிதாய்.
உலகம் பெரிதென்று உணர்.