சுவிஸ் பனி

நிர்வாணமாக
இலையுதிர்த்து நின்ற
செடி கொடிகள்
பனிப் பொழிவின்
நிவாரணத்தால்
புத்தாடை போர்த்தி
தீபாவளி கொண்டாடின
கொட்டிய பனியில்
கட்டாந் தரைகள்
பச்சைப் புல் வெளிகள்
பஞ்சு மெத்தை தயாரித்து
விஞ்சும் இவ்வுலகில்
விளம்பர அறைகூவி
விற்பனைக்கு தயாராகின
விமான ஓடு பாதைகள்
நெடுஞ் சாலைகள்
வெண் கம்பளம் விரித்து
வரவேற்க
விண்ணில்
வெள்ளைக் கொடி
பறக்க
மண்ணில்
வெண் கம்பளம்
விரிக்க
செடி கொடிகள்
வெண் கீற்றுகளாய்
சாமரை வீச
சர்வதேச சமாதான
விடுதலைக்கு
ஒப்பந்தம் கூறி
வரவேற்றன
பனி மழை
பனியோடு ஒட்டி உறவாடி
இலவம் பஞ்சுகளாய்
பூத்து அலங்கரித்த
செடி கொடிகள்
பாரம் தாங்காது
விண்ணுக்கு நன்றி கூறி
மண்ணை முத்தமிட்டன
பனிமழை