உழவனே.. நீ மண்புழுக்களோடு வேண்டுமானால் விளையாடு மலைப்பாம்புகள்

உழவனே..
நீ மண்புழுக்களோடு
வேண்டுமானால் விளையாடு.
மலைப்பாம்புகள்
உன்னை விழுங்க வந்தால்
கருவியை ஆயுதமாக்கு.
மகான்கள்..
உயிர்த்தெழுந்தாலும்
அந்த மூன்று நாட்கள்
உலகத்திற்கு
எந்த பிரச்சனையும்
இருந்ததில்லை
அப்போது..
பசியை சமாதானப்படுத்த
உழவனே நீ இருந்தாய்.
நீ..
அட்சையப் பாத்திரமல்ல
இயற்கை அளித்த
பிச்சைப் பாத்திரம்.
இறைவனிடம்
உணவிற்கு கையேந்த
நீயில்லாமல் எப்படி..
எங்களோடு
நீண்ட பயணத்தில்
உனக்கு மட்டும்
இளைப்பாரல் இல்லை.
வெயிலோடும் மழையோடும்
உறவாடும் உன்னை
உறங்க வைக்க..
இயற்கை..
தடுமாறினால்தான் உண்டு.
உனக்காக..
நாங்கள் இருக்கிறோமென்று
எங்களால்..
வார்த்தையளவில்தான்
சொல்லமுடிகிறது.
என்ன செய்வது..
நாங்கள் சுகவாசிகள்.
சுமைகளின் வாசிப்புகளுக்குகூட
பரிதாபத்திற்கு
பார்வையை கொடுத்துவிட்டு
அனுதாபத்திற்கு
போர்வையை போடுவோம்.
போராடு..
நீ புவிக்கு ஆடை நெய்பவன்
பூவிற்கும் சடங்கு செய்பவன்.
நீருக்கே தாகம் தனிப்பவன்.
மழைக்கு மகுடமளிப்பவன்.
உடலுக்கு வெயிலை பிடிப்பவன்.
உணவுக்கு உன்னை கொடுப்பவன்.
காலத்தை கேள்வி கேட்க
உனக்கு இல்லாத உரிமையா
போராடு..
நிழலாக வரும் வெற்றி
வேரோடு உறவாடும் நீதி.
நீ விழுதுகள் தாங்கிய ஆலமரம்.