நகரத்தை நகர்த்தி விட்டு
நானு தித்த கிராமத்தை
சிகர மென்று நோக்குகிறேன்
சிந்தையில் நான் தேக்குகிறேன்
வகை வகை
அற்புதங்கள்
வடிவுண்ட எழிற் கோபுரங்கள்
நிகரற்ற உறவு முறை
நெஞ்சடையும் பாச வலை!
பசுமை பெரும் பரப்பு
பைங்கியின் கூச்ச லிசை
பசு விரட்டும் காளையுடன்
பாலருந்தும் கன்றுக் குட்டி
அசுர தேவதைக்கோர் ஆலயம்
ஆலமர விரி நிழலு
கொசு வடையும் பயிராட்டம்
கூடிவரும் தென்றல் மனம்!
நாற்றி சையும் நன்னீரு
நலம் புலர்த்தும் காடுபல
காற்றோடு கை குலுக்கும்
கரையோரப் புன்னை மரம்
தூற்றும் களம் நிறைய
தூற்றாத நெல் மூட்டை
சீற்ற மிலா பேரமைதி
சிறப்புடனே எந்தன் ஊர்!
பெண்டிர் காண் மரியாதை
பெரியோரின் நீதி பலம்
கண்டாலே வியப் பூட்டும்
காளையரின் ஒற்றுமை பார்
அண்டு வர்க்கும் ஈதல்
அடுப்பூதும் பெண்டிருக்கும் ஓதல்
அன்று போலின்று மென்கிராமம்
அழகெதுவும் மாற வில்லை!