பொன்துகள் தூவியப் பொழுதைச் சுமக்கும்
கண்களில் எதிர்பார்ப்பு
மண்மகள் குளிரும் மாலையைச் சேர்ந்த
மனமதிலோர் ஈர்ப்பு
தண்ணொளி வீச தவிக்கும் நிலவு
தென்றலில் குளிக்கிறது
இன்னொரு பக்கம் இரவு இறங்க
எட்டிப் பார்க்கிறது!
கூடுகள் தேடி ஓடும் பறவைகள்
காடுகள் அடைகிறது
நாடும் நதிபல நஞ்சையைத் தழுவி
நன்னீர் அளிக்கிறது!
பாடும்பாடல் பன்னிசையேந்தி பனிதனில் மிதக்கிறது
பருவம் எய்திய பன்னீர்ப்பூக்கள்
பயன்தனை அடைகிறது!
ஆடும் கிளைகளில் ஆடும் பழங்கள்
அணில்தனைத் தேடிடுது
ஆடாதி ருக்கும் அழகுத் தென்னையில்
ஆண்குயில் கூவிடுது!
அந்தியும் சந்தியும் அடங்கும் காட்சியில்
அத்தனை நிகழ்வுகளும்
இந்த மட்டில் இரவு புலர
எனக்கினி அவத்தைகளும்!
காதலை யூட்டும் காமத்தை நீட்டும்
கவிதைகள் பாடவைக்கும்
மோகத்தி லாடும் மூச்சினில் காற்று
முற்றும் காயப்படும்!
சேதப் படாது சேர்ந்தே இரவு
செல்களை தூண்டிவிடும்
சேருமிரவில் ஜெயத்தை எட்ட
செவ்விதழ் ஆயப்படும்!
No Comment! Be the first one.