கானல் நீர்கண்டு கையெடுக்க ஏமார்ந்து
வான்பார்த்து அழுங்காலம் வரவன்றோ போகிறது
கோணல் மனந்தன்னால் கொடுத்தவையை கெடுத்தே நாமும்
ஏனோ வாழ்க்கையிலே ஏமார்ந்துப் போகின்றோம்!
நீரில்லா நிலமிருந்து நிறையுமெது பேருலகில்
போருக்கோர் வழிவகுக்கும் புவியெங்கும் நீர்நிலையால்
சீர்பெற்ற இப்புவியை சிதைப்பதற்கு காரணங்கள்
வேரோடிக் கிடக்கிறது வெப்பந்தான் தழைக்கிறது!
மீண்டுமிந்த பூமிதனை மீட்டெடுக்க வேண்டுமெனில்
தீண்டாதீர் நெகிழிதனை திரையதுவே பூமிக்கு
வேண்டும்பலன் பெற்றுவக்க வேண்டும்பல மாமரங்கள்
தீண்டவரும் காற்றுதனில் தெளிக்காதே மாசுதனை!
தண்ணீரின் அவசியத்தை தாரணிக்கு சொல்லிவைப்போம்
தன்னலத்தின் ஊறுதனை தன்னிருந்து தள்ளிவைப்போம்
மண்மகிமை மறத்தலுக்கு மறக்காமல் கொள்ளிவைப்போம்
மாவுலகம் மானிடம் மகிழ்ச்சிபெற ஒத்துழைப்போம்!
No Comment! Be the first one.