அன்னை மாதாவின் அரிய செயல்யாவும்
உன்னை வியப்பூட்டும் உள்ளூர மகிழ்வூட்டும்
என்னத் தேவையெனும் இருகை யேந்தினால்
திண்ணமது கிட்டும் தேவையெலாம் கைஎட்டும்!
ஆலயத்தில் அவளைக்காண் ஆச்சரியம் நீயடைவாய்
ஆல்போல அவள்மனது அங்கன்றோ நீதெளிவாய்
கோளதனை ஆட்டுவிக்கும் கோமகளின் கருணையினால்
ஏலாதென விட்ட எல்லாமும் நீயடைவாய்!
வணங்குவர்க்கு வலியில்லை வருவார்க்கு கவலையிலை
இணங்குவர் யெவருக்கும் எந்தவொரு நோயுமிலை
தனந் தருவாள் தக்க நலந்தருவாள்
தனைத்தேடி வருவோர்க்கு தன்னையே தான் தருவாள்!
மாதா மனங்குளிர மாமண் சிறப்படையும்
மாமண் சிறப்படைய மண்ணுயிர்கள் களிப்படையும்
ஏதெதனும் தீங்கெனில் இரப்பார்க்கு கையடையும்
எங்கள் குலமாதாவால் எல்லாமும் நலமடையும்!