விண் ணுக்கும் மண்ணுக்குமோர்
இடையில் இணைப் பிருந்தாலும்
கண் ணுக்கும் கருத்துக்குமோர்
கனவுப் பிணைப் பிருந்தாலும்
பெண் களுக்குப் பெருமைதரும்
பெறற்கரிய பிறப் பிருந்தாலும்
கண் களுக்குஇமை யிரண்டின்
காவலெனும் காப் பிருந்தாலும்
கால மெல்லாம் செல்வம்தன்னைத்
தேடிவைத்த குவிப் பிருந்தாலும்-கோடிகோடிச்
சீலம் நிறைந்த தாய்நீ ! உனையன்றி
அணுவளவும் அவை யெனக்கு உயர்ந்ததாமோ?
என் மனதில் எத்தனையோ
மறந்தறியா நினைப் பிருந்தாலும்
வென் றடையும்செயல் மீதேயென்
குறையாத குறிப் பிருந்தாலும்
வாழ்வினிலே வந்த துயரமென்னை
வதைத்த வதைப் பிருந்தாலும்
தாழ்வு, தடைபல வத்தனையும்
தாண்டிவந்த களிப் பிருந்தாலும்
தஞ்சமென்றுன் மடிமீதென் தலைசாயத்
தணியாத புதைப் பிருந்தாலே – என்தாயே!
தாளாத தனியமைதி தான்வந்தென்னை
வாஞ்சை மிகத் தழுவுதம்மா!
உன்னதமாய் உயர்ந்திட வோர்
ஓயாத முனைப் பிருந்தாலும்
உழைக்கின்ற உள்ளங் கையில்
ஊறிவந்த காய்ப் பிருந்தாலும்
கன்னல் மொழிகற்றுக் கவிபாடும்
கவின்மிகு வாய்ப் பிருந்தாலும்
அன்னமிட்ட கைகளில் வளையிட்ட
வகைவந்த வனப் பிருந்தாலும்
தின்னத் தின்னத் திகட்டாத
தீஞ்சுவை இனிப் பிருந்தாலும்-பொன்னனைய
அன்னையெனும் நீயின்றிப் போனால்
அழகுநிறைப் பூவுலகம் சிறந்திடுமா?
No Comment! Be the first one.