அந்தியிலே வந்துஒலி சிந்துகிற பூங்குயிலின்
சந்தமதில் உருவெடுக்கும் பாட்டு–அது
எந்த மொழி எந்த யினம்
என்றறியா வண்ணமதின் கூட்டு!
பந்தியிலே வந்துவிழும் பல்லினிப்பு சுவைதனிலே
எந்தவகை பேரினிப்பு சொல்வோம்–அது
தந்த சுவை தனியி டத்தை
தனித்தெடுத்து எப்படிநாம் கொள்வோம்!
ஒவ்வொன்றும் ஓரினிமை ஒதுக்கவல்லா பேரினிமை
அவ்வகையில் காணுதலே சிறப்பு-எதையும்
செவ்வன் சீர்தூக்குகையில் சிறிதென்ன பெரிதென்ன
சிந்தை தெளிவானாலே களிப்பு!
அவ்வகையே வாழ்க்கையதும் ஆக வுண்டு பேரினிப்பும்
எவ்வகையும் ருசித்தறிதல் நன்று-நீ
இவ்வகைக்கு வந்துவிட்டால் எவ்வகையும் பேதமிலை
ஈதறிந்தால் ஏது எதிரென்று?
No Comment! Be the first one.