உள்ளம் மகிழும் உன்னதத் திருநாள்
பாலகன் ஏசு வருகிற பெருநாள்
எல்லாம் கூடித் தொழுகிற ஒருநாள்
இத்தரைப் போற்றிடும் இனிய கிருஷ்துமஸ்!
தொழுவத்தில் பிறக்கும் தூதுவர் ஏசு
அழுவர் கண்ணீர் அகற்றிட வருவார்
எழுவீர் தொழுவீர் ஏசுவின் நாமம்
இவ்வு லகதனில் இயம்பி மகிழ்வீர்!
உங்கள் பாவ உறுத்தும் மூட்டையை
தன்முது கேற்றி தானே சுமக்க
திங்கள் இதனில் திரும்பவும் உயிர்க்கும்
மங்கா ஒளியை மகிழ்வுடன் ஏற்போம்!
உலகம் முழுதும் உயிர்த்தெழும் நாளை
ஒற்றுமை கொண்டு உவப்புடன் போற்று
இளக இதயம் இனிப்பு நல்கி
இன்னிசை யோடு ஏசுவைப் பாடு