உலக ஒளியாய் ஊடுருவி வருகின்றாள்
உத்தமச் சுடராய் உலகங்கெங்கும் தெரிகின்றாள்
பலவின் பொருளாய் பகிர்ந்தன்றோ இருக்கின்றாள்
பள்ளிகொள்ளா தவள் பார்வைக்கு மாதாவாய்!
இரவு பகலென்று இருபொழுதாய் இருக்கின்றாள்
இரக்கம் கருணையென இருநிலையும் வகிக்கின்றாள்
உறக்கமிலா விழிக்கு உறக்கமாய் வருமிவள்
இரக்கத்தை ஏதுரைப்பேன் இம்மண்ணோர் அறிவதற்கு!
நெருக்கும் துயர்களைய நெஞ்சுள் தானேகி
இறுக்கும் இன்னலினை இடம்மாறச் செய்கின்றாள்
பெருக்கும் சக்தியது பிழையொன்றி வருகையிலே
உருக்கும் திறனேகி உருத்தெரியா செய்கின்றாள்!
அன்னைஅருள் புரியும் ஆனந்த சேவையிலே
உன்னைப் பயன்பெற உளமார அழைக்கின்றாள்
மண்ணோர் மாதாவின் மகிமைதனை புரிந்தாரே
மந்திரத்தா லாகா மாதவை நாடிவா!
No Comment! Be the first one.