உள்ளழுக்கு முகங்காட்டும்
உணர்வழுக்கு செயல்காட்டும்
கல்லழுக்கு கொண்டவரை
கண்ணிரண்டும் காட்டிடுமே!
ஆசை யழுக்கில்லை
அப்பழுக்கு அதற்கில்லை
மோச அழுக்கெல்லாம்
மூடியவர் அரசியலார்!
வெளுத்தால் அழுக்குதிரும்
வினைப்பாட்டால்
வெளிப்புலரும்
நிலைத்த அழுக்குடையோர்
நிந்தனைக்கு உள்ளாவர்!
பழுத்த அத்திக்குள்
பார்அழுக்குப் பூச்சிகளே
புழுத்த பூச்சிகளும்
புட்டதுமே பறந்துவிடும்!
அழுக்கில் இரண்டுவகை
அகலுவதும் ஓரழுக்கு
அழுக்ககலா ஓரழுக்கு
அகத்துக்குள் உள்ளழுக்கு!
உடனுடன் களையும்
உடலழுக்கு இழுக்கில்லை
அடம்பிடித்து அகலாத
அகவழுக்கே அழுக்காகும்!
No Comment! Be the first one.