உள்ளே ஒருக்குளிர் உறக்கம் கெடுக்கும்
உள்ளம் அதனால் உயிரொடுத் துடிக்கும்
சொல்ல வியலா சுமைகள் கனக்கும்
சொல்ல வந்த சொற்களும் கசக்கும்!
மெல்ல நடுங்கும் மென்னுடல் தானே
மெட்டி சிணுங்கும் மேவும் காலில்
கள்ள மிருக்கும் கயல்விழி தன்னில்
கனவுகள் கூட கருமிருள் நகரும்!
உண்ணும் வேளை ஓரம் ஒதுங்கும்
உருபசி உடலுள் ஒளிந்தேத் தேயும்
பண்ணும் காரியம் பதட்டத்தில் முடியும்
பருவத் தொல்லை படுத்தும் பாடு!
பெண்ணவள் ஏதோ பித்துக் கொண்டு
பேசுதல் போலொரு பிரமைத் தோன்றும்
இன்னும் இன்னும் இன்னா வெல்லாம்
இவளுக் குள்ளே எழுப்புதல் காதல்!