ஈழத்து மண்ணுள் இன்றும்
எண்ணற்ற வைரத்துண்டு
வாழ்வதாய் சரித்திரத்தில்
வரையுது இந்தக் காலம்!
பாழ்மனம் பதைக்கு தய்யோ
பார்க்கவோ நீதி யில்லை
ஆழ்ந்த ஓர் துக்கத்தோடு
அலைகிறோம் அண்டை தேசம்!
என்பினைத் தோண்டி தோண்டி
எடுத்திடும் அவலந் தன்னில்
தன்மகன் தனய னுண்டோ
தன்தாய் மகளு முண்டோ
தன்னரும் நண்ப ருண்டோ
தவிப்பதை என்ன சொல்ல!
காலங்கள் ஆன பின்னும்
கண்ணீரின் கதைகள் சொல்லும்
நாளின்று வந்த தய்யோ
நாற்புறம் தோண்டக் கண்டு
நீளமாய் தொடரு முண்டு
நித்தியம் தமிழர் தேசம்
பாலமாய் வெடித்துப் போன
பற்பல நிகழ்ச்சி கண்ணில்!
காலமோர் பதிலை சொல்லும்
காத்துமே நிற்கு மெங்கள்
மீளுமோர் சக்தி மீண்டும்
மீட்டிடும் ஈழந் தன்னை
ஆளவே தமிழர் கூட்டம்
ஆங்கொரு புதிய காட்சி
காணவே போகும் நாட்கள்
கண்ணிலே வந்த தின்று!
No Comment! Be the first one.