இட்ட நெருப்பிலும் எரியும் தழலிலும்
கொட்டும் தமிழோசை-எனை
சுட்டு எரிக்கையில் சுடரிலும் ஒலிரனும்
சுந்தரத் தமிழோசை!
எட்டும் நிலத்தினில் எழில் நிலவொளியாய்
இருக்கனும் தமிழேதான்–அம்
மட்டிலும் மடியா மனந்தனில் ஆசை
மணித்தமிழ் உயிரேதான்!
தாய்வழி வந்த தமிழை வளர்க்க
தலைதனும் தருவேனே-இது
வாய் மொழியல்ல வாய்மை என்பதை
வாழ்வினில் அருள்வேனே!
ஓய்விலை எனக்கு ஒண்டமி ழுயர்த்த
ஒருபடி குனிவேனே-என்
ஆய்வினில் அன்னை அமுதத் தமிழை
ஆக்குவேன் தெளிதேனே!
No Comment! Be the first one.