அறியாமல் வரும்
அவலத்தின் பேரரவம்
குறிவைத்து குதறும் கொடுவாய் பிசாசு
புரிவதற்கும் நேரமின்றி
புலம்புகின்ற பொழுதது
தெரிந்தபின் தெளிவாகி தேர்வடையும் மனமது!
எத்தனை உயிர்கள் இறையான சம்பவங்கள்
அத்தனைக்கும் அடித்தளம் அறியாது செய்யும்பிழை
கணத்தில் கடும்வேகம் கார்களும் மோதுவது
தனவான் உயிரெனும் தப்பாது போய்சேரும்!
உறக்கத்தால் ஒன்று
உண்டான அலட்சியத்தால்
கிறங்கிய போதையதால்
கிட்டாத விழிப்புணர்வால்
நடக்கும் விபத்து நாள்தோறும் தொடர்கதையே
கடக்க காலங்கள் கதைமுடிவு எட்டாது!
விஞ்ஞான பேரறிவால் விளைவித்தோம் எதையெதையோ
அஞ்ஞானம் அண்டிவரும் ஆபத்தில் கேள்விக்குறி
எஞ்ஞான மானாலும் இதற்கு விலக்கில்லையென
எமன்போட்ட சட்டமிதோ எப்படித்தான் வெல்லுவதோ!
No Comment! Be the first one.