ஏதோ சொல்ல எத்தனிக்கும்
எனினும் கடலலை தான் திரும்பும்
பாதம் பணிந்து உள்ளோடும்
பயணத்தில் தானும் தள்ளாடும்
கரை நண்டோடு விளையாடும்
கலத்துடன் நித்தம் உறவாடும்
பிறை நிலவதனை பிய்த்தெறியும்
பெயர்வரை வதனை அழித்துரியும்!
உப்புக் காற்றை கரையேற்றும்
உவந்து துரும்பை மடைமாற்றும்
தப்பி வருவரை தானிழுத்து
தப்பிக்காமல் உள் ளேற்றும்!
அலையின் தலையில் நுரைப்பூக்கும்
அடிக்கடி அதனை கரைசேர்க்கும்
வலைவிரிப்பாரை வர வேற்கும்
வாழ்த்துகள் கூறி விடைகேட்கும்!
அலைகடல் என்பது அடைமொழியே
ஆழியின் மெய்மொழி அலைவடிவே
கலையெழிற் கூட்டும் கவிஞரிடம்
கடலலைப் பேசுதல் காவியமே!
No Comment! Be the first one.