வாழ்வின் இனிய உச்சம்
வார்த்த நல்வரத்தின் முதலே
ஆழ்ந்துணர் இருவர் மனதில்
அமைந்த கோபுர கலசம்!
உறவின் திருக்க தவமைப்பு
உளத்துள் தெய்வ நிறைவு
துறவை வெறுக்கும் சக்தி
தூண்டும் அளவுக் கோலே!
பேத மிலாதொரு பாடம்
பேச்சிலும் மூச்சிலும் ஈரம்
காதம் பிரிந்தால் கூட
கலங்கும் விழிகள் ஓர்த்து!
காதல் என்பர் பொதுவே
கசியும் இதயம் முழுதும்
ஈதே காதலின் வேதம்
ஈதடி மனதின் நாதம்!
கன்னித் தமிழென் காதலி
கண்களில் ஒளிரும் பேரொளி
இன்னிசை கூட்டும் என்னவள்
இசைக்குத் தக்க அசையவள்!
பன்நெ டுங்கால பாவையே
பச்சைக் குழந்தை போலவள்
இன்றும் இளமை மாதவள்
எழிலிலக்கண சிறப்பு சீரவள்!
புலவர் கவிஞர் போற்றிடும்
புகழுச்சம் நிறைந்த தாயவள்
இன்றும் பண்டைய காலமும்
இலக்கிய ஊற்றின் வேரவள்!
இனிமை தமிழிறு தட்டிலே
இட்டுத் தூக்கி நிறுத்தினால்
இனிமை தட்டு மேலெழும்
இன்தமிழ் தட்டு கீழுறும்!
கீழுறும் அளவை கணக்கதில்
மேலென சொல்வது தராசுமே
ஆழ்ந்து பார்த்தால் அவைத்தமிழ்
அறிவின் உச்ச அறிவது!
No Comment! Be the first one.