மறுபிறப்பொன்று மறுபடி நிகழ்ந்தால்…

பிறந்து வளர்ந்து பிரிந்த மண்ணை
பிரியா திருக்குது என்மனம்–என்றோ
துறந்த நிலையெனும் தொடருது இன்னும்
தொய்யா தெந்தென் மண்மணம்!

வளர்ந்த பொழுதும் வாழ்ந்த நாளும்
வற்றா திருக்குது என்னுளம்–அந்த
மலரும் நினைவில் மனமே உருகுது
மறைப்பதற் கில்லை கண்ணுளும்!

குழந்தை பருவம் தவழ்ந்த நிலையும்
கொடுக்குது மகிழ்ச்சி ஊஞ்சலை–அந்த
இழந்த வயதை இனிமை கணக்கில்
ஏற்றுப் பாயுது நினைவலை!

பிரிவும் நினைவும் பின்னும் முன்னும்
பேசும் நிலையில் ஆனது–என்
ஊரார் உறவையும் ஒருங்கிய நட்பையும்
உள்ளம் இன்னும் பேணுது!

மறவா தென்னுள் மலைபோல் உயருது
மறக்க வொண்ணா ஊரது–எனது
மறுபிறப் பொன்று மறுபடி என்றால்
இறைவா தாஎன் ஊரது