ஒரு முறையே பிறப்பு!

ஒற்றைக் குடைகீழ் ஒன்றி பிறந்தோம்
ஒவ்வாப் பிரிவு நமக்கேன்
இற்றை பொழுது இனிது விடிந்தால்
இந்நா ளன்றோ இனிதேன்!

பொன்னும் பொருளும் மின்னும் வரையே
கண்ணில் காண சிறப்பு
உன்னுள் உலவும் உயிரின் காற்று
ஓய அன்று இறப்பு!

சேர்த்த பணமோ சேவித்த இனமோ
சேர்ந்து வராது காடு
ஈர்த்த அன்பும் இனிய நட்புமே
இறுதி வரை உன்னோடு!

வள்ளுவன் சொன்ன வாக்கின் காலம்
வாய்க்கும் விழிப்பு உறக்கம்
தெள்ளத் தெளிந்தால் தெரிவில் கூடும்
தெளிந்த ஞான விளக்கம்!

பேதம் பிரிவு பிழையின் கூற்று
வேதம் என்பது சூழ்ச்சி
ஆதாம் ஏவாள் பேதம் கொண்டிடில்
அவனியில் மானிடமேது எழுச்சி!

ஒருமுறை பிறப்பு உலகத் திலெவர்க்கும்
உவப்புடன் வாழக் கற்போம்
மறுபிறப் பில்லை மானிடம் புகழ
மண்மடி ஒன்றி நிற்போம்!