காலமாய் போனதோ காலங்கள் யாவுமே
நாளுமே கண்ட மிச்சம்
போலதோர் ஒன்றிலை பொழுததே போனது
புலர்ந்தது முதுமை எச்சம்!
மேனியில் சுருக்கமும் மிளிர்விலா கருமையும்
கேணியுள் ஒலியும் போல
ஏனிது நிகழ்ந்தது
எதற்கிது விளைந்தது
எழிலுடல் நூலும் போல!
ஆடிடும் பல்லுகள் அதரத்து வெளுப்புமே
கோடிட முடிவி னடியே
வாடிய முகமதும் வலுவிலா கைகளும்
கூடிய முதிர்வின் விடையே!
இருமலும் தும்மலும் இடுப்பது பிடிப்பதும்
இறுதியின் வெறியி னாட்டம்
இருப்பதும் இறப்பதும் இறைவனின் பெயரிலே
இயற்கைதான் ஆடும் ஆட்டம்
No Comment! Be the first one.