தாயகத்து மண்ணிருந்து
தனித்துவந்த வேதனையை
வாயவிழ்த்து சொல்லுங்கால்
வலிப்பெருக்கம் பெருங்கடலே!
தீயபல சக்திகளால்
தீப்பிடிக்க எம்மண்ணு
ஓயவிலை உயிர்பலிகள்
ஒட்டவில்லை உறவுகளும்!
பாழும் உயிர்பிழைக்க
பசிக்கென்று இரைதேட
வாழ்ந்த மண்ணைவிட்டு
வந்துவிட்டோம் பலநாடு
ஈழம் கனவுதனில்
இருக்கிறது அப்படியே
வாழுகிறோம் வலியோடு
வஞ்சகத்தை நொந்தபடி!
வீடிருக்க தாய்நாட்டில்
வீதிகளில் வெளிநாட்டில்
தேடி அலைகின்றோம்
தெய்வத்தை தினம்நாடி
கோடியே கிடைத்தாலும்
குபேரனாய் வாழ்ந்தாலும்
ஈடாமோ எம்மீழ
இல்லறத்து வாழ்க்கைக்கு!
ஏக்கப் பெருந்தீயில்
ஏளனத்து வேதனையில்
ஊக்கஓர் சக்தியின்றி
உள்ளழும் உறவுபல
தீர்க்கஓர் வெளிச்சம்வரும்
திடமான நம்பிக்கை
ஏற்றுலவும் எங்களுக்கு
என்றுவரும் விடுதலையும்