எழுதி மறப்போம் இடைவரும் துன்பம்
அழுது மறக்க ஆகா தெனினும்
தொழுது விலக்க முடியா தெனினும்
எழுதி விலக்க எளிதே முடியும்!
கண்டதை எழுது காட்சியைக் கொண்டு
காணா தெழுது கற்பனை மொண்டு
உண்டென சொல்லலை உணர்வுடன் எழுது
உறவுப் பிரிவின் உச்சம் எழுது!
உலகை மறந்து உள்வலி நீக்க
நலம் மனம்கூடி நன்மை பயக்க
பலவெனும் பாரம் சிலதனை இறக்க
அளவென இன்றி அன்றன் றெழுது!
எழுதும் கவிதை ஏக்கத்தை விலக்கும்
எழுமனக் குறையின் எடையை குறைக்கும்
இழுபறி என்ற இருளும் போக
இன்னொளி காண எழுதுதல் நன்றே
No Comment! Be the first one.