காலம் கலிகாலம்!
உள்ளோர் உறங்குங்கால்
ஊர்மொத்தம் பாழாகும்
எல்லாம் தலைகீழாய்
ஏளனத்துக் காளாகும்
வல்லார் கைஓங்கும்
வரங்கொடுத்தார் தலைவீங்கும்
நல்லார் எனும்சொல்லு
நற்றகராதி மறைந்துவிடும்!
காலம் கலிகாலம்
கண்ணன்மார் திருலீலை
ஆளுவரும் நடத்துகின்ற
அரங்கேற்ற பெருங்கொடுமை
நாளும் உழைக்காது
நாள்தோறும் சாப்பிடவே
நீளும் சோம்பலுக்கு
நித்தியமே ஆராத்தி!
பொய்பெருகும் போக்குதனில்
போராட்ட ஊர்வலங்கள்
மெய்வருத்த ஆளின்றி
மேதினியில் பொருளழிவு
கைகொடுக்கும் களவுதனை
கற்பிக்கும் பள்ளிகளும்
ஐயமின்றி அவனியிலே
அவதரிக்கப் போகுதுபார்!
காலம் கலிகாலம்
கண்ணயர்ந்தால் பறிபோகும்
மூலமழிந்து விடும்
முறைகேடே முன்னேறும்
கேள ஆளின்றி
கெட்டதெலாம் நடைமுறைக்கு
ஆளவரப் போவதற்கு
அச்சாரம் இந்நாளே!