ஆனையூரான்

அழு அதன் ஆழம் வரை

அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை, முழுமையான அழுகையை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.
மனம் மகிழ்வதைப் போல
மனம் வருந்தல் எளிதில் நிகழ்த்திவிட முடிவதில்லை…
இடம் பொருள் ஏவல் என எல்லாம் பார்க்கவேண்டியதாயிருக்கிறது…
இழந்ததை நினைத்து அழவோ,
இருப்பதை நினைத்து அழவோ, இனிவருவது நினைத்து அழவோ,
என ஒரு பெரும் காரணம்,
கொடும் வலி, நெடும் நேரம், ஒற்றைத் தனிமை எல்லாம் ஒருசேரத் தேவைப்படுகிறது இதற்கு…
இவையெல்லாம் மொத்தமாய்க் கிடைக்கும் அரிய நிகழ்வுக்கு காத்திருக்கையில், அழுகைக்கான அத்தனை காரணங்களும் நமத்துப் போய்விடுகின்றன உள்மன ஈரங்களில்…
அன்றாடம் அழும் இச்சமூகம் இன்னும் அழுகையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முயல்வதே இல்லை…
யாரேனும் அழுதாலோ, அழுக முற்பட்டாலோ, அதீத கேள்விகள் ஏதுமின்றி முழுவதுமாக அழ உதவிடுங்கள். அழுது முடித்ததும் அணைத்துத் தேற்றிக் கொள்ளலாம், அதுவரை நிம்மதியாக அவர்கள் ஆழ அழுது மீளட்டும்…