அறிவே விளக்கு அதற்கிலை விலக்கு!
காலக் கைகளில் கடன்பட்ட வாழ்வு
கடினமும் உண்டு களிப்பு முண்டு
ஆளும் புவியில் அதிசயம் மானிடம்
அறிவே விளக்கு அதற்கிலை விலக்கு!
நாளு முழைப்பவர் நாற்றிசை உண்டு
நலத்தை சுவைப்பவர் நம்மிலும் உண்டு
தாளா சுமையென தனைத்தான் நோவோர்
தக்கவை நோக்கா தரித்திரப் பிறவி!
தேடி யெதுவும் தேங்கிட வாரா
கோடியில் ஒருவன் கொள்வது அதிஷ்டம்
ஆடி முடிக்கும் ஆறடிக் கூட்டுக்கு
ஐயம் என்பது அடைக்கும் தாழே!
தத்துவம் பேசி தனித்திருந் தாலெதும்
ஒத்து விழாது உன்னிரு கையில்
சித்தம் சிவமென சிந்தையைத் தொலைப்பது
சித்தன் கூட செய்யா வேளை!
முயற்சியும் உழைப்பும் முடங்கா அறிவும்
வியனுறு விளைவை வித்திடும் நன்று
பயனுற எழுநீ பயணம் நடத்து
பலனைப் பெறுவாய் பலப்பல விடத்து!