முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
‘அப்பா’ ஆகிவிட
ஆவலுடன் காத்திருப்பான்.
அவளுடைய அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு,
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்?
உண்மையில் அவன் ஆசை
அவளைவிட பேராசை.
அவள் ஆசைப்படுவதெல்லாம்
அழகாய் கொடுத்திடுவான்.
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்.
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்.
சீசரில் பிரசவித்தால் – அவள்
வலி தீர அழுதிடுவான்.
பெண்களுக்கு கண் குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்.
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்.
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை.
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை.
அவள் முகத்தை தன்மார்பில்
தான் அணைத்துத் தாயாவான்.
அவள் வலியைத் தான் கொஞ்சம்
கடன் வாங்கி வைத்திருப்பான்.
குழந்தையைத் தோள்மீதும்
மனைவியைத் தன்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
‘அவன்’ என்றால் அது மிகையல்ல !!
No Comment! Be the first one.