உள்ளொளியாய் உயிரொளியாய்
உலகார்ந்தப் பேரொளியாய்
அல்லும் பகலுமென அன்றாட நல்லிரவாய்
எல்லா விடந்தனிலும் இருக்கின்ற பேரழகே!
சொல்லில் சுவையாக சூத்திரத்தின் கருவாக
வெல்லும் மானிடர்க்கு வேண்டியதோர் அறிவாக
இல்லார் கைக்கு இருக்கஒரு பிடியாக
நல்லார் மனமெங்கும் நலியாத குணமானாய்!
உறவு சுகமூட்டி உணர்வதினில் நெறியூட்டி
தரவாய் செப்பனிட்டு
தரணியுளோர் வாழுதற்கு
முறையே வழிகாட்டி முன்வழியாய் தானிருந்து
வருவோர்க்கு வழிவகுத்த வல்லமையே மாதாவே!
ஒளித் தேரில்நீ ஊர்வலமாய் வருவதற்கு
வளித்தேன் வடமொன்று வாமகளே மரியாளே
களித்தே காசினியில் கரைகாண எவ்வுயிரும்
விளித்தேன்வா வினையாற்றல் உன் கடமை
No Comment! Be the first one.