பெண்மையைப் போற்று!
ஆணும் பெண்ணும் இருஉருளை
அறிவீ ரிந்தக்கருப் பொருளை
தேனேப் பெண்தான் ஆனாலும்
தெய்வத் தாயவள் அருளாலும்!
சக்தியின் உருவம் சமப்பங்கில்
சந்ததி பெருக்குமவள் பங்கில்
நிர்க்கதி செய்வது பெருங்கொடுமை
நீடித்தால் நிலம் பாழுடைமை!
பேதப்படுத்தும் பால் நோக்கி
பிழிந்து எறிவது சரியில்லை
சேதப் படுத்திட பெண்ணென்றெ
செய்கிற தவறு முறையில்லை!
மாதம் படுந்துயர் மாதருக்கு
மாவலி ஒன்றாய் தானிருக்கு
ஏதவள் செய்த தவறுளும்
இப்புவியில் பெண்ணாய் பிறந்தவளும்!
பெற்றுக் கொடுப்பவள் அவளாகும்
பேரின்பம் தருவதும் அவளாகும்
உற்று வளர்ப்பதும் அவளாகும்
உன்னைப் படைத்ததும் அவளாகும்!
கற்றுக் கொடுத்திடும் வாழ்வியலில்
கற்பு என்பது இயலாகும்
முற்று மதனைக் காப்பதற்கு
முனைவது ஆணின் செயலாகும்!