உறவுசூழ் வாழ்கை தன்னை
ஒருமுறை நினைத்துப் பாரீர்
வரவினி இல்லை யிந்த
வளமான வசிக்கும் பூமி
இரவினில் நேரம் வாய்த்தால்
இல்லையோர் நாளும் வாய்த்தால்
சிறகினை அசைத்து மெல்ல
சிந்தனைக் கூடம் செல்லு!
காலினை நீட்டிப் போட்டு
கதைசொலும் பாட்டி நிற்பாள்
கோலியைப் போட்டு ஆடும்
குழந்தைகள் சத்தம் கேட்கும்
வேலியைக் கட்டும் தாத்தா
வெற்றிலை போட்டுத் துப்ப
தோளதில் துண்டு மின்ன
தூரத்தில் அப்பா வருகை!
ஊரது மகிழ்வில் துள்ள
ஊர்த்தேர் உருளும் காட்சி
சீரது அளிக்கும் அத்தை
சிரித்துமே பார்த்து நிற்பாள்
வேற்றுமை சிறிது மற்று
வீதியில் நிரம்பக் கூட்டம்
மாற்றுநல் மதத்தார் கூட
மகிழ்ச்சியில் திளைக்கும் கோலம்!
அப்பப்பா அந்த நாட்கள்
அணுவதும் துன்ப மில்லை
எப்போதும் மகிழ்ச்சி யொன்றே
இருந்தது நாட்டுக் குள்ளே
No Comment! Be the first one.