பட்டில் ஒளியும் பருவம்
பகட்டில் மிளிரும் உருவம்
கொட்டி நிறையும் உணர்வு
கொஞ்சம் நாணக் குழைவு
தட்டில் குவளைத் தேநீர்
தடுக்கும் காலை அச்சம்
கிட்டே உறவுத் தோழி
கிளுகிளுப்பில் மிதக்கும் உள்ளம்
நல்ல நேரம் பார்த்து
நளினம் நடையில் சேர்த்து
உள்ளோர் முன்னே வருவாள்
உறிஞ்சத் தேநீர் தருவாள்!
மாப்பிளை பெண்ணை பார்ப்பான்
மங்கை சிறிது வேர்ப்பாள்
கூப்பிய விரல்கள் நடுங்கும்
கூனி உடலும் குலுங்கும்!
சம்மதம் கேட்பார் உறவார்
சரியென சொல்லும் மௌனம்
உம்மென இருப்பார் பிள்ளை
உள்மனம் தவிக்கும் மெல்ல!
சுற்றியும் கேலிக் கிண்டல்
சுரக்கும் ஆர்வம் சூழ
முற்ற நிகழ்வு முறையே
முடிவுரை அஞ்சலில் என்பார்
பிற்றோர் நாளில் கடிதம்
பிய்த்திடும் பெண்ணின் மனதை
வற்றா வலியாய் சொற்கள்
வனிதையை பிடிக்கலை யென்று!
No Comment! Be the first one.