மறைக்க ஒன்றும் மனதில் இல்லை
மறைத்தா லதனால் மலரும் தொல்லை
திறந்தே வைத்தேன் திருக்கத வதனை
தெய்வ வாசல் மூடுதல் பாவம்!
எண்ணங்கள் கோடி எதிரும் புதிரும்
இதற்குள் ஓடி ஏதோ தேடும்
கண்ணிமை நேரக் கடத்தலின் பின்னே
கலையும் கூடும் கனவில் தோயும்!
எல்லாம் பழுப்பது என்பது கிடையா
ஏதோ பழுக்கும்சில இலையொடு கருகும்
வல்லான் மனத்தில் வகுத்த கணக்கே
வாழ்வின் மிச்சம் வாழ்வோர் அறியார்!
உள்ள நாளில் ஒவ்வொன் றறிந்தும்
ஒன்றும் விளங்கா ஓர்பெரும் மாயை
இல்லா திருந்தால் இறை நினைவேது
இல்லா நிலையிலும் இருப்பவன் இறையே!