மரத்தை வெட்டாதீர்!
உலவும் மேகம் உறங்கும் காட்சி
உள்ளோர் நெஞ்சை உலுக்குது
நிலவும் வறட்சி நித்தம் நித்தம்
நிம்மதி தன்னை குலைக்குது!
நிலத்தடி நீரு நீங்கிப் போச்சு
நினைக்க நெஞ்சு வெடிக்குது
பலத்தை இழந்து பரந்த பூமி
பாலை யாகி பிளக்குது!
தண்ணீ ரில்லா தேச மானால்
தழைப்பது எங்கே உயிரினம்
தண்ணீ ரில்லா தரைவெளி எங்கும்
தற்கொலை செய்யுது பயிரினம்!
நீரைக் காக்க நினைப்பது ஒன்றே
நிலத்தைக் காக்கும் செயலது
நீர்நிலை காக்க மறந்து போனால்
நீயும் வாழ்ந்து பயனெது!
நிலவில் கூட நீரு மில்லை
நீயும் நானும் போய்வாழ
நிலத்தை வைத்து என்ன செய்ய
நிறையும் வெப்பம் பேய்போல!
காப்போம் நன்னீர் காப்பது கடமை
பார்ப்போ மென்று ஒதுங்காதே
ஏய்க்கும் வானின் இதயம் இரங்கும்
இருக்கும் மரத்தை வெட்டாதே!