பொய்யினும் பொய்யே பூதஉடல்
நெய்யுள வரைக்கும் நீலஒளி
பையிலே உள்ளது பறந்தால்
பட்டுடல் வேகும் கட்டை!
எஞ்சுவ தேது மில்லை
இருந்ததும் உண்மை இல்லை
அஞ்சுதல் தேவை யில்லை
ஆறடி நிலையே யில்லை!
ஆசைகள் உள்ள மட்டும்
அளவிலா கூடு கட்டும்
நாசமாய் போன உள்ளம்
நாமதன் அடிமை மட்டும்!
உறவுகள் அன்பு பாசம்
உயிரிலே ஒட்டு மில்லை
வரவுமாய் செலவு மாக
வந்தது போகச் செய்யும்!
வளர்த்த தன்மேனிக் கூட்டில்
வசிக்கவே வந்த நோய்கள்
தளர்ந்துடல் புசிக்க லாகும்
தண்ணுடல் உணவு மாகும்!
களத்திலே ஆட்டம் போடும்
காலமே ஒருநாள் நம்மை
தளத்திலே கொள்ளி யிட்டு
தத்துவம் பேசும் தீயும்!