ஆறாத வலிகளை
அள்ளிச் சுமந்திட்ட
கொடும் நாள்..
அனைத்து உலகமும்
கூட்டாகி கொள்ளி
போட்ட கொடும் நாள்..
தமிழன் கண்ணீருக்கு
விலை சொல்ல
மறந்த நாள்..
முள்ளி வாய்க்கால்
முடிவாகிப் போகாதென்று
அறியப்பட்ட நாள்..
பூக்கள் உதிர்ந்தன
பிஞ்சுகள் விழுந்தன
வேர்கள் அறுந்தன
முளைத்த விதைகள்
மண்ணுக்குள் புதைக்கப்பட்டன
முளைவிடும் விதைகள்
உடலுக்குள் புதைக்கப்பட்டன
மரணப்பிடியிலிருந்த
ஈழக்கதிர்கள் ஒப்பாரியில்
ஓலமிட்டன
எத்தனை பால்முகம்
மரித்த தாயின்
மார்பை தேடியது
பசி போக்க…
இப்படி
எழுத்துக்கு போதாத
எண்ணில் அடங்காத
எத்தனை அவலங்கள்
எம்மண்ணில் அவதரித்தன
கடந்த பக்கத்தை
கணப்பொழுது மீட்டிப்பார்த்தால்
கண்ணீரின் நகர்வுகள் தான்
கண்மடலை சந்திக்கின்றன
எப்படி மறக்க முடியும் நினைவுகளை
எப்படி மறுக்க முடியும் உண்மைகளை
இவை எப்போதும் எம் உயிரலையில்
வீசிக்கொண்டே தான் இருக்கும்
எனவே
உன்னத தமிழே!
உலகத்தமிழனே!
வீச்சு உன் விழியில்
வீரம் உன் நெஞ்சில்
ஈழமேனியில் கொடிவிட
புதிதாய் முளைவிடுவோம்