தேடிடத் தேடு அன்னையிடம்!
படைத்த உலகினில் பயனுற உயிர்கள்
அடைத்தவை யாவும் அன்னையின் மகிமை
கிடைத்தவை எல்லாம் கிழக்கென சேரா
உடைத்தே பொதுவாய் ஒவ்வொரு திசையிலும்!
எண்திசை பரந்து எவரும் துய்க்க
தன்னரும் கருணை தாயவள் கனிவில்
மண்ணோர் பெறவே மகிழ்வுடன் அமைத்து
கண்ணோர்க் கின்றாள் கன்னி மரியாள்!
பரம்பொருள் தன்னை படைப்புகள் பெற்றிட
அறம்பொருள் இன்ப அமைவ தனுள்ளே
ஒருபெரு தத்துவ ஒளியாய் மாதா
உறைந்தாள் உயிர்கள் உணர்ந்திடும் வண்ணம்!
இருப்ப வளிடத்தில் இரந்தால் போதும்
இரப்பார் கைக்கு எல்லாம் கிடைக்கும்
திருப்பலி செய்திட திரண்டே வருவீர்
தேடுதல் அடைய தேடவள் வீடு!
No Comment! Be the first one.